Saturday, 8 October 2011

காய்கறி, பழங்களை சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்


உலகம் முழுவதும் அக்டோபர் 8ம் தேதி ‘‘உலக ஆதரவு தினம்’’ கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை அரசு பொது மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை துறை சார்பில் ‘உலக ஆதரவு  தினம்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பழனி, மருத்துவக் கல்லூரி முதல் வர் கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோயால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கஷ்டமான தருணங்களில் மருத்துவ ரீதியாகவும், எல்லா வகையிலும் உதவியாக இருப்போம்’’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புற்றுநோயில் இருந்து விடுதலை பெற்றதை கொண்டாடும் விதமாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் மற்றும் அவர்களின் கஷ்டங்கள் கண்ணுக்கு தெரியாமல் காற்றில் பறந்து போவதை நினைவுபடுத்துவதற்காக, 500  வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது. பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 3 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
பின்னர், கல்லூரி முதல்வர் கனகசபை பேசியதாவது:
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களையும், வறுமையில் வாடும் அவர்களது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பெண்கள் கர்ப்பப்பை, மார்பு மற்றும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், கர்ப்பப்பை புற்றுநோய் அதிகம். காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வராது.
ஆண்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு அதிகம் ஆளாகின்றனர். இதற்கு புகைப்பிடிப்பதே முக்கிய காரணம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிய நிலையிலேயே, சிகிச்சைக்காக டாக்டர்களிடம் வருகின்றனர். அப்படி இருக்கக் கூடாது.
ஆரம்பத்திலேயே வந்தால், நோயாயை முழுவதுமாக குணப்படுத்தி விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment